Thursday, October 15, 2015

நம் ஊரைப்போல வருமா?

நம் ஊரைப்போல வருமா?

காலம்: 1979-1991.  இடம்: கீழ்ப்பாக்கம் ரிசர்வ் வங்கிக் குடியிருப்பு.  சோலைவனத்தில் பூங்காவைப் போல், பரபரப்பான பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு அருகே அமைதியான ஒரு குடியிருப்பு.  அனைத்தும் தன்னுள் அடக்கம் (self-contained) என்னலாம் போல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரு பத்து நிமிட நடைத் தொலைவிற்குள் கிட்டும்.  காய்கறி, மளிகை, பலசரக்குக் கடைகள் மட்டுமின்றி, உணவகம், மருத்துவ மனை, திரைப்படக் கொட்டகை என்று எதற்குமே நடந்தே சென்று விடலாம்.  ஒரு நாளைக்கு 10000 அடிகள் நடந்தால் உடலுக்கு நல்லது என்பதற்காக நடைத் தொலைவு அளவியைக் (pedometer) கையில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் வீணாக நடந்து திரியும் இந்த ஊரிலிருந்து கொண்டு, மலரும் நினைவுகளைப் போல் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால், “சொர்க்கமே என்றாலும், அது நம் ஊரைப்போல வருமா?” என்னும் பாட்டே மனதிற்கு வருகிறது.

அப்போது எனக்குச் சிறு பிராயமாதலால், எப்போதும் விளையாட்டுப் புத்தி தான்.  (இப்போதும் அவ்வாறு தான் என்று சொல்வாரும் உண்டு J).  விளையாடுவதற்காகக் குடியிருப்புக்கு உள்ளேயே இரண்டு பெரிய மைதானங்கள் இருந்தன.  உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கபில் தேவ் அடித்து விளாசுவதைக் கண்டால், அனைத்துக் குழந்தைகளும் கிரிக்கெட் விளையாடுவோம்.  கால்பந்துப் போட்டியில் மரடோனா இலக்கில் (goal) பந்துகளைப் போடுவதைக் கண்டால், அனைவரும் கால்பந்து விளையாடுவோம்.  டென்னிசில் (Tennis) போரிஸ் பெக்கர் அங்கும் இங்கும் தாவி பந்துகளைத் திரும்பி அடிப்பதைக் கண்டால், தரையிலே சுண்ணாம்பு கொண்டு டென்னிஸ் அரங்கை வரைந்து கையாலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கி விடுவோம்.  கோடை விடுமுறையானால் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை பூப்பந்து (badminton), கிரிக்கெட், பட்டம், கில்லி, பம்பரம், சடுகுடு என்று விளையாடாத விளையாட்டே கிடையாது.  ஊன், உறக்கம் இவைகளுக்கு மட்டுமே வீட்டிற்கு வருவது வழக்கம்.  இப்படி இருந்த நம் இருப்பையும், இப்போது நம் குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் இருப்பையும், விளையாடுவதற்குக் கூட பெற்றோரை எதிர்பார்ப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் “எந்நாடு என்றாலும், அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?” என்னும் பாடல் வரிகளே நினைவுக்கு வருகிறது.

நான் வளர்ந்த இடம் ஒரு குடியிருப்பாதலால், அங்கு சமூக நிகழ்ச்சிகள் (community events) அதிகம்.  பொங்கல், பிள்ளையார் சதுர்த்தி போன்ற பண்டிகை தினங்களில் குடியிருப்பிலிருந்த கோவிலில் கொட்டு மேளத்தோடு, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என்று அந்த இடமே விழாக்கோலம் பூண்டுவிடும். தீபாவளியின் போது யார் நிறைய ராக்கெட் விடுகிறார்கள், யாருடைய சரவெடி நீளமானது, மிகவும் ஒலி எழுப்பக் கூடிய வெடி யாருடையது என்றெல்லாம் நண்பர்களுக்கிடையே விளையாட்டுத் தனமான போட்டிகள் நிலவுவதுண்டு.  நவராத்திரியின்போது ஒவ்வொரு நாளும் யார் வீட்டில் தேங்காய் மாங்காய் எல்லாம் போட்டு ருசியான சுண்டல் பண்ணி இருக்கிறார்களோ அவர்கள் வீட்டிற்கு அனைத்துக் குழந்தைகளும் கையை நீட்டிக் கொண்டு சென்று விடுவோம்.  இப்படி ஒரே குடும்பத்தைப் போல அந்நியர்கள் என்றே யாரும் இல்லாதபடி வாழ்ந்த வாழ்க்கையையும் பக்கத்து வீட்டுக்காரர்களின் பெயரைக்கூடத் தெரியாமல் வாழும் இந்த வாழ்க்கையையும் சீர் தூக்கிப் பார்த்தால், “ஊரு விட்டு ஊரு வந்தது” எதற்காக என்று தோன்றும்.

இவ்வளவு அருமையான (நாம் வளர்ந்து வந்த) இந்த இடத்தை, நம் குழந்தைகளுக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு, சென்ற குளிர்கால விடுமுறையின் போது, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு அந்தக் குடியிருப்புக்குச் சுற்றுலாப் பயணிகளைப் போலச் சென்றோம்.  சாயம் விளையாட்டு நேரத்தில், மைதானங்களில் சிறுவர் சிறுமியர் ஒருவரும் இல்லை.  விண்ணில் பட்டங்கள் இல்லை.  மண்ணில் பம்பரங்கள் இல்லை.  நான் தங்கியிருந்த காலத்திலிருந்து இன்று வரை அதே குடியிருப்பில் இருந்து வந்த என் மாமியைக் கண்டேன்.  அந்தக் காலத்தில், மைதானத்தின் ஒரு துளி இடம் கூட வீணாகாதபடி பல்வேறு விளையாட்டுக்கள் ஒரே சமயத்தில் நடந்துகொண்டிருக்குமே!  இப்பொழுது, வெறிச்சோடிப் போய் இருக்கிறதே!  என்ன ஆயிற்று? என்று கேட்டேன்.  “காலம் மாறிப் போயிடுச்சுப்பா!  இப்போதெல்லாம் குழந்தைகள் வீட்டுக்கு உள்ளேயே கணிப்பொறி விளையாட்டும் (computer games), ஒளித்தோற்ற விளையாட்டும் (video games) விளையாடுவதிலேயே ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்றார் என் மாமி.  தூக்கி வாரிப் போட்டது.  அப்போது தான் புரிந்து கொண்டேன், “அந்த காலத்து நம் ஊரைப்போல, இந்த காலத்து நம் ஊரும் வராது” என்று!


நம் ஊரைப் போல வருமா என்று தான் நம் பெற்றோரும் அவர்களது கிராமங்களைப் பற்றி நமக்குச் சொன்னார்கள்.  நம் ஊரைப் போல வருமா என்று தான் நாம் நம் குழந்தைகளுக்கு நமது சொந்த ஊர்களைப் பற்றி இப்போது சொல்கிறோம்.  இதையே தான் நம் குழந்தைகள், அவர்கள் வளர்ந்த இடமாகிய போர்ட்லன்டைப் (Portland) பற்றி நம் பேரக்குழந்தைகளுக்குச் சொல்லப் போகிறார்கள்.  “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்” என்னுமாப்போல் அவரவர்களுக்கு அவரவர் வளர்ந்த இடமே தலைசிறந்ததாகத் தோற்றும்.

No comments: